மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு தேவநாதன் உள்ளிட்ட மூவருக்கு ஜாமின் மறுப்பு
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு தேவநாதன் உள்ளிட்ட மூவருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஆக 29, 2024 02:48 AM
சென்னை:நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் உள்பட மூவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஜாமின் கேட்டு, 'டான்பிட்' எனப்படும் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், தேவநாதன் உட்பட மூன்று பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.மலர்வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு ஆஜராகி, ''வழக்கில் ஒருவர் தலைமறைவாக உள்ளார்.
இதுவரை, 800 புகார்கள் வந்துள்ளன. தினமும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. விசாரணை துவக்க நிலையில் உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது,'' என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இவ்வழக்கில் கைதான மூவரையும் ஏழு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து வரும் தேவநாதன், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.