ADDED : ஆக 01, 2024 11:10 PM
சென்னை:இரு பிரிவினரிடையே மோதலை துாண்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கில், பா.ஜ., செயலர் அஸ்வத்தாமனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசேனா மாநில செயலரான தங்க முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டம், நாகப்பட்டினத்தில் நடந்தது. அதில், பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் பங்கேற்று பேசினார். இதில், இரு பிரிவினர் இடையே மோதலை துாண்டும் வகையில் பேசியதாக கூறி, அஸ்வத்தாமன் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'வாரம்தோறும் சனிக்கிழமை நாகூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; இதுபோல வெறுப்பு பேச்சு பேச மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்ற நிபந்தனையுடன், அஸ்வத்தாமனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
***