ADDED : ஏப் 21, 2024 01:29 AM
சென்னை:'ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன், இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, தமிழகத்தில் நேற்று முன் தினம் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்தது.
முழு ஒத்துழைப்பு வழங்கிய அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பூத் ஏஜென்டுகளுக்கும் நன்றி.
அதேபோல், கூட்டணி மற்றும் தோழமை கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. ஓட்டுப்பதிவு நிறைவடைந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 4ல் ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருக்காமல், ஓட்டு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும், இரவு பகல் பாராமல், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

