ADDED : ஏப் 27, 2024 01:15 AM
சென்னை:'பள்ளிகளில் மாணவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில், உடல், மனரீதியான தண்டனை அளித்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தண்டனை அளிப்பது குற்றமாகும். இதை கண்காணிக்க, மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மன உளைச்சல் ஏற்படுத்துவது, சித்ரவதையான தண்டனைகள் தருவது, ஜாதி, மத ரீதியாகவும், வேறு வகைகளிலும், பாரபட்சமாக மாணவர்களை நடத்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்கள்.
மேலும், மாணவர்களை அவமதிப்பது போன்று பேசுவது, தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது, கேலி பெயர்களை கூறி அழைப்பது, மனம் புண்படும்படி கிண்டல் செய்வது, உடல் அசைவுகள் உள்ளிட்டவற்றை கேலி செய்வது போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்.
இதுபோன்ற செயல்கள் நடக்காமல், பள்ளிகளில் விதிகளை பின்பற்ற வேண்டும். இதுகுறித்து புகார் எழுந்தால், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

