ADDED : மே 29, 2024 07:20 PM
மதுரை:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் நாச்சியார் - ஆண்டாள் கோவில், செயல் அலுவலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு உட்பட்ட காட்டழகர், பேச்சியம்மன் உபகோவில்கள் செண்பகத்தோப்பு பகுதியில் அமைந்துள்ளன. இங்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. கோவிலுக்கு வருவோரிடம் நுழைவுக் கட்டணம், வாகனங்களில் வருவோரிடம் அவற்றை நிறுத்துவதற்கான கட்டணத்தை சூழல் மேம்பாட்டுக்குழு வசூலிக்கலாம் என கலெக்டர் உத்தரவிட்டார்.
இது, கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலம். கலெக்டரின் உத்தரவு சட்டப்படி ஏற்புடையதல்ல. அவரது உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.விஜயகுமார்: கலெக்டரின் உத்தரவிற்கு ஜூன் 18 வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.