முந்திரி விவசாயிகள் அவமதிப்பு வழக்கு அறிக்கை அளிக்க வங்கிக்கு உத்தரவு
முந்திரி விவசாயிகள் அவமதிப்பு வழக்கு அறிக்கை அளிக்க வங்கிக்கு உத்தரவு
ADDED : ஜூன் 16, 2024 01:05 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, அரவிந்த குமார், தம்பிதுரை, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு:
கடலுார் மாவட்டத்தில், முந்திரி உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். முந்திரிக்கு நல்ல விலை இல்லாத நேரங்களில், அரசு கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம்.
கிடங்குகளில் வைக்கப்படும் முந்திரி, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை பெற, கடலுார் மாவட்ட முந்திரி உற்பத்தி விவசாயிகள், முந்திரிக்கு காப்பீடு செய்து, அதற்கான பிரீமியத்தையும் தவறாமல் செலுத்துவர்.
இதற்கிடையே முந்திரி அளவு, அதற்கான காப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், முந்திரிக்கான சந்தை விலையில், 70 சதவீதத்தை வங்கியில் கடனாக பெற முடியும்.
இதே முறையில், 2018ல் விளைந்த முந்திரியை அரசு கிடங்குகளில் வைத்து, அதற்கான காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டது. முந்திரியின் விலையில், 70 சதவீதத்தை கடலுார் மாவட்ட கரிக்காடு கனரா வங்கியில் கடனாக பெற்றிருந்தோம்.
கடந்த 2019ல் ஏற்பட்ட தானே, நிவார், புரவி புயல்களால், கிடங்கில் வைத்திருந்த முந்திரி முழுதும் சேதமடைந்தது. இருப்பினும், கடனுக்கு 2020 நவம்பர் வரையிலான கூடுதல் தவணை தொகையை செலுத்தும்படி, கனரா வங்கி நோட்டீஸ் அனுப்பியது.
இன்சூரன்ஸ் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பெறாமல், எங்களிடம் கடனை கேட்பதுடன், சேதமடைந்த முந்திரியை, 3ம் நபர்களுடன் சேர்ந்து குறைந்த விலைக்கு வங்கி ஏலம் விட்டுள்ளது. இதுகுறித்து, வங்கியிடம் பல முறை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை.
வங்கிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்கள் மனுக்களை பரிசீலித்து சட்டத்துக்கு உட்பட்டு வாய்ப்பளித்து, எட்டு வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, 2021 ஆகஸ்ட், 17ல் உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மனுக்களை வங்கி பரிசீலிக்கவில்லை. எனவே, கனரா வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, கனரா வங்கி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

