ADDED : மார் 25, 2024 03:36 AM
நாகர்கோவில் : கரையோரங்களில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கன்னியாகுமரி சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் சின்ன முட்டம் அனைத்து விசைப்படகு சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கேரளா, கர்நாடகா மற்றும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த தங்கு தொழில் செய்யும் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு பதிலாக கன்னியாகுமரி கடல் பகுதியில் கரையோரங்களில் மீன் பிடிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மீன்வளத் துறைக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கரையோரங்களில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதால் நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரி விசைப்படகு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

