டீ குடிக்கவும், சைக்கிள் ஓட்டவுமா முதல்வரானீர்கள்? இ.பி.எஸ்., கேள்வி
டீ குடிக்கவும், சைக்கிள் ஓட்டவுமா முதல்வரானீர்கள்? இ.பி.எஸ்., கேள்வி
ADDED : ஏப் 04, 2024 11:40 PM

மேட்டுப்பாளையம்:''தனக்கு பின்னால் யார் முதல்வர் என ஸ்டாலின் அறிவிப்பாரா?'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து, காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போன முறை மக்கள் ஏமாந்து, தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தி விட்டனர். எல்லா துறையிலும் ஊழலை கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்படிபட்ட ஆட்சி இருக்கலாமா? ஆட்சி மாற்றம் கொண்டு வரணும். மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம்; தீங்கு செய்தால் ஆட்சியாளர்கள் அப்புறப்படுத்தப்படுவர்.
கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி என, வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் இந்த தேர்தல்.
தனக்கு பின்னால் யார் முதல்வர் என ஸ்டாலின் அறிவிப்பாரா? இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. ஸ்டாலினுக்கு சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதற்கு இண்டியா கூட்டணி தேவை.
நாங்கள் ஆட்சிக்கு ஆசைப்பட்டிருந்தால் பா.ஜ., கூட்டணியில் இருந்திருப்போம். தமிழக மக்கள் என்ன நினைக்கின்றனரோ அதை செய்து காட்டுவது தான் எங்கள் வேலை.
நான் இங்கு தலைவராக பேசவில்லை. தொண்டனாக பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க., எவ்வுளவு சதி திட்டம் செய்தது. எங்களிடம் எட்டப்பன் இருந்தார். அவர் காணாமல் போய்விட்டார்.
ஸ்டாலின் டீ குடிப்பதும், சைக்கிள் ஓட்டுவதுமாக விளம்பரம் செய்கிறார். இதற்காகவா உங்களை மக்கள் முதல்வராக ஆக்கினர்.
நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்கள் ஆக்குவேன்; ஊதியம் உயர்த்தி வழங்குவேன் என்றார் ஸ்டாலின். ஆனால் செய்யவில்லை. மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் கொடுத்தார்.
அது மக்களின் வரி பணம். கடன் வாங்கி கொடுக்கின்றனர். அதை மக்களாகிய நீங்கள் தான் செலுத்த வேண்டும். தி.மு.க.,விற்கு இது தான் கடைசி தேர்தல்.
எம்.பி., ராஜா காற்றில் ஊழல் செய்தவர். காங்கிரஸ் -- தி.மு.க., ஆட்சியில் 1.72 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்; திகார் சிறை சென்றவர். எங்கள் வேட்பாளர் துாய்மையானவர்.
அத்திக்கடவு- - அவினாசி திட்டம் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம். அவினாசி, மேட்டுப்பாளையம், பவானிசாகர் தொகுதிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம்.
அன்னுாரில், 3,600 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை வருவதை கண்டித்தது அ.தி.மு.க., தான். எப்போதும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.

