ADDED : மே 20, 2024 12:41 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், நரிப்பையூர் கடற்கரை பகுதியில் நேற்று காலை திடீரென திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், துாத்துக்குடி வன உயிரின சரகத்தை சேர்ந்த அலுவலர்கள் பார்வையிட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த திமிங்கலம் மீண்டும் கடலில் விடப்பட்டது. இருந்தாலும், கடலுக்குள் செல்லாமல் அந்த திமிங்கலம் கரை பகுதியில் சுற்றி வந்தது.
இந்நிலையில், மேலும் இரண்டு திமிங்கலங்கள் கடற்கரை பகுதியில் தென்பட்டன.
இதையடுத்து, கரை ஒதுங்கிய திமிங்கலத்தை வேட்டை தடுப்பு காவலர் செல்வம் கடலுக்குள் வழிகாட்டி, நீந்தி அழைத்துச் சென்றார். பின்னர், கரை ஒதுங்கிய திமிங்கலம் மற்ற இரு திமிங்கலங்களுடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு திரும்பியது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நரிப்பையூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது பிக்மி கில்லெர் வேல் எனப்படும் திமிங்கலம் வகையை சேர்ந்தது. இந்தியாவில் மிக அரிதாகவே தென்பட்டுள்ளது. கடற்கரையில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

