அ.தி.மு.க.,வில் மிகப்பெரிய பிளவு ஏற்படும்: அமைச்சர் ரகுபதி 'குண்டு'
அ.தி.மு.க.,வில் மிகப்பெரிய பிளவு ஏற்படும்: அமைச்சர் ரகுபதி 'குண்டு'
ADDED : மே 13, 2024 03:40 AM
புதுக்கோட்டை : ''தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வில் மிகப்பெரிய பிளவு ஏற்பட உள்ளது. அ.தி.மு.க., செங்கோட்டையன் தலைமையில் செல்ல உள்ளதா, வேலுமணி தலைமையில் செல்ல உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,'' என, புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தலை நேற்று திறந்து வைத்த அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பேச்சிலிருந்தே பா.ஜ., 2024 தேர்தலில் தோல்வி அடைவது நிச்சயம் என, தெரியவந்துள்ளது. அதை நிரூபிக்கும் விதமாகத்தான் பிரதமர் பேச்சு உள்ளது. அவருடைய பேச்சு
'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. குஜராத்தில்கூட 10 இடங்களில் பா.ஜ., பிடிப்பது அரிதாகத் தான் இருக்கும். சவுக்கு சங்கர் மீது பொய்வழக்கு போட வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு கிடையாது.
எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அப்போதுதான் சரியான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விடுத்து வேறுவிதமான விமர்சனங்களை வைத்தால், அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க., தலைமை செங்கோட்டையன் தலைமையில் செல்லப்போகிறதா, வேலுமணி தலைமையில் செல்லப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.,வில் தேர்தல் முடிவுக்கு பிறகு மிகப்பெரிய பிளவு உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சட்ட பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, அனைத்து படிப்புகளும் இங்கு உள்ளன. புதிதாக ஏதாவது படிப்புகள் தேவைப்பட்டால் அதை உருவாக்குவதற்கு அரசு தயாராக உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க.,வின் மூன்று ஆண்டு கால ஆட்சி முடிந்து, நான்காவது ஆண்டு தொடக்க விழாவிற்கான பரிசாக அது இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.