பறவை காய்ச்சல் எதிரொலி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
பறவை காய்ச்சல் எதிரொலி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ADDED : மார் 06, 2025 11:54 PM
சென்னை:'தமிழகம் முழுதும் உள்ள கோழிப் பண்ணைகளில், பறவை காய்ச்சல் தொடர்பாக, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன' என, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கோழி, வாத்து உள்ளிட்டவற்றுக்கு, பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு வந்ததில்லை. தற்போது, அண்டை மாநிலங்களில் பரவி வருவதால், கடந்த மாதத்தில் இருந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக, ஆந்திர எல்லைகளான, வேலுார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், சோதனைப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வரும் லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
அவற்றில், கோழி, முட்டை மற்றும் பறவை சம்பந்தப்பட்டவை இருந்தால், அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. வாகனங்களின் டயர், கதவுகளில் கிருமி நாசினி தெளித்த பிறகே, வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
உள்நாட்டில், கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வாயிலாக, அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. நீர்நிலைகளில், பறவைகளின் நிலை குறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மற்றும் ஈரோடில் உள்ள, 'கோழியின நோய் கண்டறியும் ஆய்வு கூடம்' மற்றும் தமிழகம் முழுதும் உள்ள, 31 கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவுகள், இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.