மணல் கொள்ளை குறித்து விவாதிக்க அரசு மறுப்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு
மணல் கொள்ளை குறித்து விவாதிக்க அரசு மறுப்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 28, 2024 11:17 PM
சென்னை:பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மணல் கொள்ளை எப்படி நடக்கிறது என, செய்திகள் வந்துள்ளன. 4,780 கோடி ரூபாய் அளவுக்கு, தமிழக மக்கள் வளம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், மாநில டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் பேச, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம். அதை சபாநாயகர் எடுத்துக்கொள்ளவில்லை.
தமிழகத்தில் ஒரு புறம் அரசு வருமானத்திற்காக, மதுக்கடைகளை நடத்துகிறது. மற்றொருபுறம், இயற்கை வளமான மணல், அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிகமான அளவு கொள்ளை நடந்துள்ளது.
அரசுக்கு வருமானம் வராமல், இடையில் உள்ளவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை சாப்பிட்டுள்ளனர். இந்தியாவின் வழிகாட்டி என பேசுவோர், இது குறித்து விவாதிக்க மறுக்கின்றனர். தமிழக அரசு விளக்கம் அளிக்க மறுக்கிறது.
மணல் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நீர்வளத்துறை சார்பில், அனைத்து உறுப்பினர்களுக்கும், அழகான 'கப்' வழங்கி உள்ளனர். தமிழகஅரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
வரக்கூடிய காலத்தில் இந்த கப்பில் மணல் நிரப்பி, வருங்கால தலைமுறைக்கு, இதுதான் மணல் என்று காட்டாமல் இருக்கும் சூழலை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

