விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.,வும் விருப்பம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.,வும் விருப்பம்
ADDED : மே 16, 2024 02:48 AM
சென்னை:விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.,வும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அந்த தொகுதியில் உள்ள மத்திய அரசின் பயனாளிகளை சந்தித்து, கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகிகளை, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல், 6ல் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம். இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பா.ம.க., விரும்புவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அதே சமயம், அந்த தொகுதியில் போட்டியிட, தே.ஜ., கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.,வும் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்து, பா.ஜ., பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையில், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற பலம் வாய்ந்த கூட்டணி உருவானது. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ஜ., போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.