ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி ஆஜராக உத்தரவு
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி ஆஜராக உத்தரவு
ADDED : ஜூலை 06, 2024 02:53 AM
சென்னை:லோக்சபா தேர்தலின்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு, வரும் 11ம் தேதி ஆஜராகும்படி, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6ல், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ரயிலில் இருந்த மூவரிடம் இருந்து, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது; மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக, பணம் எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.
வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, நயினார் நாகேந்திரன், பா.ஜ., அமைப்பு செயலர் கேசவவிநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி இருந்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், எஸ்.ஆர்.சேகர் தாக்கல் செய்த மனுவில், 'ஏற்கனவே, கோவையில் என்னிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து சம்மன் அனுப்பி துன்புறுத்தக் கூடாது' என்று கூறியிருந்தார்.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, ''ஏற்கனவே விசாரணை நடந்த நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது,'' என்றார்.
இதையடுத்து, வரும் 11ம் தேதி ஆஜராக, எஸ்.ஆர்.சேகருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.