ADDED : ஆக 10, 2024 02:53 AM
சென்னை:தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
தி.மு.க.,வைச் சேர்ந்த சாய் லட்சுமிகாந்த் பாரதி என்பவர் சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில், கொச்சையான அவதுாறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடி தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
சாய் லட்சுமிகாந்த் பாரதி, தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதியின் மகன். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அஸ்வத்தாமன் கூறுகையில், ''தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில், அவதூறான கருத்துக்களுடன் தி.மு.க.,வினர் பதிவிடுகின்றனர். ஆதாரத்துடன் புகார் கொடுக்கிறோம்; நடவடிக்கை இல்லை. புகாரைப் பெற்றுக் கொள்ளவே போலீஸ் மறுக்கிறது. அதனால், சாய் லட்சுமிகாந்த் பாரதி விவகாரத்தில், நேரடியாகச் சென்று போலீசில் புகார் கொடுத்தேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின், புகாரை பெற்று ஒப்பம் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கோர்ட்டுக்குச் செல்வேன். இதற்கிடையில், பயந்து போன சாய் லட்சுமிகாந்த் பாரதி, தன்னுடைய பதிவை நீக்கி உள்ளார்,'' என்றார்.

