அடுத்த கட்ட தேர்தல்களில் அதிக ஓட்டுப்பதிவு மாநில நிர்வாகிகளுக்கு பா.ஜ., அறிவுறுத்தல்
அடுத்த கட்ட தேர்தல்களில் அதிக ஓட்டுப்பதிவு மாநில நிர்வாகிகளுக்கு பா.ஜ., அறிவுறுத்தல்
ADDED : ஏப் 23, 2024 10:13 PM
சென்னை:'அடுத்த 6 கட்ட தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கச் செய்ய தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்' என, பா.ஜ.,வினருக்கு அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஓட்டுப் பதிவு கடந்த 19ம் தேதி, 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்தது. தமிழகம் 39, உத்தரகண்ட் 5, மணிப்பூர் 2, மேகலாயா 2, மிசோரம் 1, நாகலாந்து 1, சிக்கிம் 1 ஆகிய மாநிலங்களிலும், அந்தமான் 1, லட்சத்தீவு 1, புதுச்சேரி 1 ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் முழுமையாக தேர்தல் முடிந்துள்ளது.
முதல் கட்ட ஓட்டுப்பதிவில் 2019 தேர்தலை விட 4 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்திருப்பது, அனைத்து அரசியல் கட்சிகளையும் பதற்றமடையச் செய்துள்ளது. ஓட்டுப்பதிவு குறைவு ஆளும்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று பொதுவான கருத்து உள்ளது.
ஆனால், நடுத்தர. உயர் நடுத்தர மக்கள் ஓட்டளிக்காததால் தான் ஓட்டுப் பதிவு குறைந்துள்ளது. இது பா.ஜ.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பீஹார் 4, சத்தீஸ்கர் 1, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரா 5, ராஜஸ்தான் 12, உத்தரப் பிரதேசம் 8, உத்தரகண்ட் 5, மேற்கு வங்கம் 3 என பா.ஜ.,வுக்கு வாய்ப்புள்ள இடங்களில் நடந்த தேர்தலில் ஓட்டுப் பதிவு கடந்த தேர்தலை விட குறைந்திருப்பது, அக்கட்சியை கவலை அடையச் செய்துள்ளது.
அதை தொடர்ந்து, ஓட்டுப் பதிவு ஏன் குறைந்தது; அதனால் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று, பா.ஜ., நிர்வாகிகளிடம் அக்கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது.
'வரும் 26ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில், கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மகாராஷ்டிரா 8, மத்தியப் பிரதேசம் 7, உத்தரப் பிரதேசம் 8, மேற்கு வங்கம் 3 தொகுதிகளில், அதிக ஓட்டுப் பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
'நடுத்தர மக்கள், உயர் நடுத்தர மக்களை ஓட்டளிக்கச் செய்தாலே ஓட்டுப் பதிவு அதிகரிக்கும். பா.ஜ.,வுக்கும் சாதகமாக இருக்கும். எனவே, ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு அதிகமாக நடக்க தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்' என, மாநில நிர்வாகிகள், வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

