அமித் ஷாவுக்கு பதில் சந்தான பாரதி பா.ஜ., போஸ்டரால் சர்ச்சை
அமித் ஷாவுக்கு பதில் சந்தான பாரதி பா.ஜ., போஸ்டரால் சர்ச்சை
ADDED : மார் 07, 2025 09:14 PM

அரக்கோணம்:அரக்கோணத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டரில் அவருடைய புகைப்படத்துக்கு பதிலாக, நடிகர் சந்தான பாரதி இடம் பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியிலுள்ள, மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்திற்கு, அப்படை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்தார். இதையொட்டி மாவட்டம் முழுதும், அமித் ஷாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி பெயரிலும் அமித் ஷாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதில், 'ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும், இந்தியாவின் இரும்பு மனிதரே, வாழும் வரலாறே, வருக, வருக' என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டரில் அமித் ஷா புகைப்படத்துக்கு பதிலாக தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டரை படம் எடுத்த பலரும், சமூக வலைதளப் பதிவில், பா.ஜ.,வை வறுத்தெடுத்தனர்.
இது தொடர்பாக அருள்மொழி வெளியிட்டுள்ள வீடியோவில், ''எனக்கும் அந்த போஸ்டருக்கும், எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. என் பெயரையும், அமைச்சர் அமித் ஷா பெயரை கெடுக்கும் விதமாக யாரோ திட்டமிட்டு, போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது குறித்து ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க இருக்கிறேன்,'' என கூறியுள்ளார்.
அமித் ஷா புகைப்படத்துக்கு பதிலாக, நடிகர் சந்தானபாரதி போட்டோ இடம் பெற்றிருப்பது, பா.ஜ., வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.