பா.ஜ., நினைப்பது இம்முறை நடக்காது கட்சியினரிடம் உற்சாகத்தோடு பேசும் ஸ்டாலின்
பா.ஜ., நினைப்பது இம்முறை நடக்காது கட்சியினரிடம் உற்சாகத்தோடு பேசும் ஸ்டாலின்
ADDED : ஏப் 24, 2024 08:39 PM
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு, கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள், மா.செ.,க்கள், வேட்பாளர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்களை, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
ஸ்டாலினை சந்தித்தவர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு வேட்பாளரிடமும், வெற்றி வித்தியாசம் கடந்த முறையை விட கூடுதலாக இருக்குமா, குறைவாக இருக்குமா என்று மட்டுமே கேட்கிறார். 'மத்தியில் மோடி ஆட்சி கட்டாயம் அகற்றப்படும். 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதில் தி.மு.க., கட்டாயம் இடம்பெறும்' என்று கூறுகிறார்.
தர்மபுரி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் சவுமியா வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு இருப்பதாக, பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆனாலும், தர்மபுரி தி.மு.க., வேட்பாளர் மணி சந்தித்தபோது, 'எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள்?' என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். அவரும், '1.75 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என்று கூறியுள்ளார். ஸ்டாலின் சந்தோஷத்தில், 'வெரிகுட்' என கூறி, மணியை தட்டிக் கொடுத்து அனுப்பி உள்ளார்.
தமிழகம் முழுதும் தி.மு.க., மற்றும் உளவுத் துறை சார்பில் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை மேற்கோள் காட்டியே, தன்னை சந்திப்போரிடம் பேசுகிறார்.
'கோவையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றனவே?' என சில அமைச்சர்கள் கூறியதற்கு, 'அதெல்லாம் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள். நம் கையில் இருப்பது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு' என, ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி சார்பில் யார் யார் தேர்தல் வேலை பார்த்தனர், யார் யார் எதிர் தரப்பினருக்கு மறைமுக உதவிகள் செய்தனர் போன்ற விபரங்களை தொகுத்து பட்டியலாக வைத்துள்ள ஸ்டாலின், தேர்தலுக்குப் பின், பலரின் கட்சிப் பதவிகள் பறிபோகும் என, சில தகவல்களை சூசகமாக வெளிப்படுத்துகிறார்.
இதனால், ஆர்வமாக ஸ்டாலினை சந்திக்க செல்பவர்களில் சிலர், கலவர முகத்துடன் வெளியே வருவதும் நடக்கிறது.
'தென் மாநிலங்களில் இண்டியா கூட்டணியே அதிக தொகுதிகளில் வெல்லும்; பஞ்சாப், ஹரியானா, டில்லி, மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். வட கிழக்கு மாநிலங்களிலும், உத்தர பிரதேசத்திலும் பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. இவை அந்தந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் உறுதியான தகவல்கள்.
இதை கூட்டணியில் இருக்கும் பிரதான கட்சி தலைவர்களிடம் கூறி, அவர்களை தேர்தல் களத்தில் உற்சாகமாக பணி செய்ய வைத்திருக்கிறேன். குறிப்பாக, காங்., தலைவர்களான சோனியா, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் ஆகியோர் அடிக்கடி என்னிடம் பேசுகின்றனர். அவர்கள் கூறும் தகவல்களும் சாதகமாக தான் இருக்கின்றன. அதனால், இம்முறை பா.ஜ., நினைப்பது நடக்காது' என, ஸ்டாலின் கூறி வருகிறார்.
அத்துடன், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியில், தமிழகத்தில் இருந்து யார் யாரை அமைச்சராக்குவது என்பது வரை, குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களோடு ஆலோசனை நடத்தி முடித்திருக்கும் தகவல் வரை, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு என்ற ஸ்டாலினின் நம்பிக்கை அப்படியே பலிக்குமா என தெரியாது. ஆனால், தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக தான் அமையும் என்பதில் திடமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதனால், தேர்தல் முடிவுகள் வரும் வரை, தேவையில்லாத விஷயங்களில், எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்கு பதிலடி தர வேண்டாம் என்றும், கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையும், அவரது பேச்சில் இருந்தே உணர முடிந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் --
***

