கேப்பர் மலையில் தொழிற்சாலை அமைக்க பா.ஜ.,அனுமதிக்காது மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கடலுாரில் பேச்சு
கேப்பர் மலையில் தொழிற்சாலை அமைக்க பா.ஜ.,அனுமதிக்காது மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கடலுாரில் பேச்சு
ADDED : பிப் 15, 2025 04:47 AM

கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாவட்டத்தலைவர் அறிமுகக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் நடந்தது.
மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கடலுார் மாநகர தலைவர்கள் அருண், பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.
மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசியதாவது:
கடலுார் கேப்பர் மலையில் விவசாயத்தை அழிக்க தி.மு.க.,அரசு முயற்சிக்கிறது. இதை தடுக்க களத்தில் நின்றது பா.ஜ.,தான். கடலுார் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதியிலும் தாமரை மலர்ந்தாக வேண்டும்.
தி.மு.க.,வை அழிக்கும் வேலையை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்த்துக் கொள்வார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது தான் அவரது வேலையாக உள்ளது. இங்குள்ள சிப்காட்டில் முறையாக கழிவுகளை வெளியேற்றுவதில்லை. அப்புறப்படுத்த மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு அதை வாங்கித்தருவதில்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தருவதில்லை என்பது போல, மோடி சாமி போல வரம் தந்தாலும், பூசாரியாக நாம் உட்கார வைத்துள்ள தி.மு.க., வாங்கித்தருவதில்லை.
மத்திய அரசு பட்ஜெட்டில் பெண்கள், பட்டியலின மக்கள் தொழில் தொடங்க இரண்டு கோடி ரூபாய் வரை பிணையில்லா கடன், ஒரு லட்சம் ரூபாய் வரை மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு வரிவிலக்கு, கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு ரூ. 5லட்சம் வரை கடன் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்கள் அனைவருமே பலன் அடைகின்றனர். தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யவில்லை என தி.மு.க.,அரசு மக்களை ஏமற்றி வருகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்கச்சென்ற உதயநிதி மகன் இன்பநிதி, அவரது நண்பர்களுக்கு கலெக்டர் எழுந்து நின்று சல்யூட் அடிக்கும் நிலைதான் உள்ளது. பா.ஜ.,கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள் என கேட்க தி.மு.க.,வினர் வருகிறார்கள்.
ஆனால் தி.மு.க.,கூட்டத்திற்கு தான் செல்ல ஆளில்லை. கேப்பர் மலையில் தோல்
தொழிற்சாலை வந்தால், கெடிலம் ஆறு கூவம் நதியை போலாகிவிடும். ராணிப்பேட்டை போல கேன்சர் நோயாளிகள் பெருகிவிடுவார்கள். கேப்பர் மலையில் தொழிற்சாலை அமைக்க பா.ஜ.,அனுமதிக்காது எனப்பேசினார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

