பா.ஜ., பக்கம் இழுக்க விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பா; அ.தி.மு.க., குற்றச்சாட்டின் பின்னணி
பா.ஜ., பக்கம் இழுக்க விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பா; அ.தி.மு.க., குற்றச்சாட்டின் பின்னணி
ADDED : பிப் 15, 2025 04:40 AM
மதுரை : அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்க்கு கேட்காமலேயே, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 'தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் விஜயை சேர்க்கவே இந்த பாதுகாப்பு' என அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் தி.மு.க., அரசு குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் விஜய்க்கு, மத்திய உளவுத்துறை பரிந்துரைபடி 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி, பிரதமர் முதல் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வரை அச்சுறுத்தலை பொறுத்து மத்திய உள்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் எஸ்.பி.ஜி., இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ் பிரிவுகளில் வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
யார் யாருக்கு பாதுகாப்பு
செல்வாக்கு, கூடும் கூட்டம், விமர்சனங்கள், மிரட்டல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு எத்தகைய பிரிவு பாதுகாப்பு அளிப்பது என்பதை மத்திய உள்துறை முடிவு செய்கிறது. எஸ்.பி.ஜி, எனும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் ஸ்டாலின், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பாதுகாப்பு பணியில் இசட் பிளஸ் பிரிவைச் சேர்ந்த 55 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், தலாய்லாமா மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கிய கட்சி தலைவர்கள் சிலருக்கு இசட் பிரிவைச் சேர்ந்த 22 பேர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து விமர்சனங்களுக்கு ஆளாகும் நடிகையும், எம்.பி.,யுமான கங்கனா ரணாவத், தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் நடிகர் சல்மான்கான் போன்றோருக்கு 'ஒய்' பிரிவைச் சேர்ந்த 11 வீரர்கள் பாதுகாப்பு அளிக்கிறார்கள். மிகக்குறைந்த அச்சுறுத்தல் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதில் 2 வீரர்கள் இருப்பர்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் இன்னும் முழுமையாக தமிழகத்தை வலம் வராத நிலையில் அவரது பாதுகாப்பு கருதி மத்திய அரசு தானாக முன்வந்து 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இது அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 'சட்டசபை தேர்தலில் பா.ஜ., பக்கம் இழுப்பதற்காக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதேசமயம் 'களத்திற்கே செல்லாத விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பா' என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
ஆனால் விஜய்க்கு தொடர்ந்து கூடும் கூட்டம், பரந்துார் விமான நிலையத்திற்கான இடப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தது, தொடர்ந்து தி.மு.க., ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருவது போன்ற காரணங்களலும், அரசியல் கட்சி தலைவர், அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற அடிப்படையிலும் அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உளவுத்துறை பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநில போலீசை நம்ப முடியாது
பா.ஜ.,வினர் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் அரசியலில் காட்சிகள் மாறலாம். கூட்டணிகள் இடம்மாறலாம். அதை கணக்கிட்டு விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குகூட அவர்களின் பாதுகாப்பு கருதி 'இசட்' மற்றும் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. விஜய்க்கு பாதுகாப்பு அளித்தது தேர்தலுக்காக அல்ல. தி.மு.க., அரசின்கீழ் உள்ள மாநில போலீசை நம்ப முடியாது. தி.மு.க., சொல்வதைதான் அவர்கள் கேட்பார்கள். மத்திய அரசு பாதுகாப்பு அளித்துள்ளதால் இனி விஜய் தைரியமாக களத்திற்கு வரலாம். விமர்சிக்கலாம் என்றனர்.