பா.ஜ.,வின் பி டீம் தான் தி.மு.க., சென்னையில் சீறிய சீமான்
பா.ஜ.,வின் பி டீம் தான் தி.மு.க., சென்னையில் சீறிய சீமான்
ADDED : ஆக 19, 2024 04:21 AM

'தி.மு.க.,வை யார் எதிர்த்தாலும் அவர்களை சங்கி என்று கூறி விடுகின்றனர். உண்மையில், பா.ஜ.,வின் பி டீம் தி.மு.க., தான்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கப் போகிறது என பரபரப்பாக பேசுகின்றனர். ஆனால், எங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.
தி.மு.க.,வை யார் எதிர்த்தாலும் அவர்களை சங்கி என்று கூறுகின்றனர். உண்மையில், பா.ஜ.,வின் பி டீம் தி.மு.க., தான். மத்திய பட்ஜெட்டில் தமிழத்தின் பெயர் இல்லை; நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவருடைய அப்பா கருணாநிதி பெயரில், 100 ரூபாய் நாணயம், மத்திய அரசு தரப்பில் வெளியிடுகின்றனர் என்றதும், மத்திய அமைச்சரோடு கை குலுக்கி கொண்டாடுகின்றார்.
ஸ்டாலின் அவர்களே, உங்கள் வீராப்பும், பா.ஜ., மீதான கோபமும் அவ்வளவுதானா? வெறும் 100 ரூபாய். அதுவும் செல்லாக்காசுக்கு சரண் அடைந்து விட்டீர்களே.
கடந்த 3 ஆண்டுகளில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்ததைத் தவிர, வேற ஏதாவது உருப்படியாக செய்தது உண்டா?
திருச்சி எஸ்.பி., வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் எவ்வித தொடர்பில்லை. அவர் குறித்து, சமூக வலைதளத்தில் ஆபாசமாக எழுதியவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன்.
என்னையும், என் குடும்பத்தாரையும், என் கட்சிப் பெண்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். எனது குடும்பத்தை பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக எழுதியதை எல்லாம் நான் கடந்து செல்கிறேன். வருண்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் இந்த வேலையை செய்தனர் என என்னாலும் சொல்ல முடியும். ஆனால், அதை நான் செய்யத் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்
-நமது நிருபர்-.

