ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்த போது தடுத்தேன்! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்
ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்த போது தடுத்தேன்! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்
ADDED : ஏப் 22, 2024 04:42 AM

கம்பம் : ''சென்னை, ஆர்.கே., நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி அணியினர் தான் பணம் கொடுத்தனர். அதைப்பார்த்து என் கட்சியினர் டோக்கன் கொடுத்த போது நான் தடுத்தேன்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவில் விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
தேர்தல் முடிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள் என்கின்றனர். நான் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை.
கடந்த 1999ல் இங்கு போட்டியிட்டதில் இருந்து 2011 வரை நடந்த பல தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. 2011க்கு பிறகு தான் இந்த கலாசாரம் பரவி உள்ளது.
சென்னை, ஆர்.கே., நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி அணியினர் தான் பணம் கொடுத்தனர்.
அதைப்பார்த்து என் கட்சியினர் டோக்கன் கொடுத்த போது தடுத்து நிறுத்தியவன் நான்.
இந்த தேர்தலில் 'டோக்கன்' கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பா.ஜ.,விற்கு நல்ல மரியாதை உள்ளது.
எனவே தான் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., என் கைக்கு வரும் என்கிறார். அவர் படித்தவர்.
கிராமங்களில் மூன்று ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த அ.தி.மு.க., அழிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் கூறுகிறார்.
நான் பொது மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு உதவி செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வர, இந்த தேர்தலில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கம்பம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் விழாவிற்கு வந்த போது, அவரை தினகரன் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

