ADDED : ஜூலை 29, 2024 12:35 AM
கரூர்: கரூர் மாவட்டம் காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஜீவா, 19; திருப்பூர் தனியார் நிதி நிறுவன ஊழியர்.
கடந்த 22ல், விடுமுறையில் சொந்த ஊர் வந்தவர் மாயமானார். ஜீவாவின் தாய் சுந்தரவள்ளி புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்தனர். ஜீவா மொபைல் போன் சிக்னல் கடைசியாக, கரூர் - திருச்சி பழைய சாலை, தொழிற்பேட்டை பகுதியில், 'சுவிட்ச் ஆப்' ஆனது தெரிந்தது. அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். தொழிற்பேட்டையின் பழைய கட்டடத்துக்கு பின்பகுதியில், முட்புதருக்குள் குழி தோண்டப்பட்ட அடையாளம் இருந்தது.
சுதாரித்த போலீசார், கரூர் தாசில்தார் குமரேசன், டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் முன்னிலையில், அந்த இடத்தில் நேற்று தோண்டினர். அப்போது ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு புதைக்கப்பட்ட ஜீவா உடலை கண்டுபிடித்தனர். கொலை தொடர்பாக, காந்தி கிராமம், இ.பி.காலனியைச் சேர்ந்த சசிகுமார், 35, உட்பட ஆறு பேரை, பசுபதிபாளையம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கடந்த 2021ல் கிருஷ்ணமூர்த்தி என்பவர், அவரது நண்பர்களான சசிகுமார், மோகன் ஆகியோரை மேலப்பாளையம் அமராவதி ஆற்றுக்கு அழைத்து சென்று, முன் விரோதம் காரணமாக மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதில், மோகன் இறந்தார்.
இதில் சிறை சென்ற கிருஷ்ணமூர்த்தி, தற்போது ஜாமினில் உள்ளார். மோகனை கொலை செய்ய ஜீவா தான் திட்டம் போட்டு தந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், ஜீவாவை வெட்டிக்கொலை செய்து புதைத்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

