7 நாளில் குண்டு வெடிக்கும்: ஏர்போர்ட்டுக்கு மிரட்டல்
7 நாளில் குண்டு வெடிக்கும்: ஏர்போர்ட்டுக்கு மிரட்டல்
ADDED : மே 28, 2024 05:02 AM

சென்னை : 'சென்னை விமான நிலையத்தில், ஒரு வாரத்தில் குண்டு வெடிக்கும்' என, தனியார் விமான நிறுவனத்திற்கு, இ - மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்திற்கும், மேலும் இரு தனியார் அலுவலகங்களுக்கும், நேற்று முன்தினம் ஒரு இ - மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது.
அந்நிறுவனங்கள் அளித்த தகவலை அடுத்து, விமான நிலைய இயக்குனர் தலைமையில்,உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்த இ - மெயில் தகவல்களை ஆய்வு செய்த போது, போலி மிரட்டல் எனத் தெரிந்தது. ஆனாலும், விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேகப்படும் பயணியரை நிறுத்தி, மீண்டும் ஒரு முறை பரிசோதிக்கின்றனர்.
'பார்க்கிங்' பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் கார்களையும் சோதனை செய்கின்றனர். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் அனுப்ப எடுத்து வரப்படும் 'பார்சல்'களையும் தீவிர சோதனை செய்கின்றனர்.
இதற்கிடையில், அந்த இ - மெயில்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு போலி மெயில் ஐ.டி., உருவாக்கி, இந்த மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டுள்ளது தெரிந்தது.
இந்த மிரட்டல் தகவல்களில், போதை கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சில வாசகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, போதைப்பொருட்கள் கடத்தும் கும்பலின் வேலையாக இருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.