வாரம் 6 மணி நேரமே முன்பதிவு; மணல் விற்பனை முடக்கம்
வாரம் 6 மணி நேரமே முன்பதிவு; மணல் விற்பனை முடக்கம்
ADDED : ஏப் 22, 2024 04:34 AM
சென்னை : தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்று மணல் எடுக்க, சுற்றுச்சூழல் அனுமதி இருந்தாலும், ஓரிரு இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு, ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே மணல் வழங்கப்படுகிறது.
மிகக் குறைந்த எண்ணிக்கையில் குவாரிகள் செயல்படுவதால், ஆன்லைன் முறையில் முன்பதிவு செய் வோருக்கு, உடனுக்குடன் மணல் கிடைப்பதில்லை.
இத்திட்டத்தை துவங்கும் போது, பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருசில மாதங்கள் மட்டுமே இந்த நடைமுறை அமலில் இருந்தது.
தற்போது, குவாரிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்ததால், மணல் முன்பதிவையும் அதிகாரிகள் முடக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 10க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதிலும், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் விற்பனைக்கான மொபைல் போன் செயலி மற்றும் இணைய தளத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம். பிற்பகல் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மட்டுமே, லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்யலாம் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் பொது மக்களுக்கு ஆறு மணி நேரமும், லாரி உரிமையாளர்களுக்கு மூன்று மணி நேரமும் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்தால், இணையதளம் மற்றும் சர்வர் வேகம் இதற்கு ஒத்துழைக்காது.
சுற்றுச்சூழல் அனுமதி உள்ள அனைத்து குவாரிகளும் செயல்பட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

