அப்பாவும், மகனும் இறந்துட்டாங்களே... விசாரணை சரியா நடக்குமா: கோர்ட்
அப்பாவும், மகனும் இறந்துட்டாங்களே... விசாரணை சரியா நடக்குமா: கோர்ட்
ADDED : ஆக 29, 2024 02:56 AM
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த போலி என்.சி.சி., முகாமில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில், மாணவிக்கு தொல்லை கொடுத்த வழக்கில், என்.சி.சி., போலி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க, சிறப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டிருந்த சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'என்.சி.சி., முகாம் நடத்திய சிவராமன் மரணம்; அவரது தந்தையும் மரணம் என்பதை பார்க்கும்போது, விசாரணை எப்படி சரியான முறையில் நடப்பதாக கருத முடியும்? சிவராமனின் தந்தை மரணம் குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்.
பள்ளி மீது எடுத்த நடவடிக்கை குறித்து, பிற்பகலில் அறிக்கை அளிக்க வேண்டும்' என முதல் பெஞ்ச் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடியதாவது:
அனுமதியின்றி என்.சி.சி., முகாம் நடத்திய பள்ளியிடம் விளக்கம் கோரி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் அளிக்கும் பதில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவராமனின் தந்தை, மது போதையில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக, காலையில் வாதாடும்போது தவறாக குறிப்பிட்டு விட்டேன்.
சர்க்கரை நோய் பாதிப்பால், அவர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.
சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவியருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
போக்சோ சட்டத்தின் கீழ், மாணவியரின் பெற்றோர் சார்பில் இழப்பீடு கேட்டு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சிவராமன் மரணம் குறித்து, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து, விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். பள்ளி தொடர்பாக நடத்தப்படும் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு கோரி மாணவியரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுக்களை சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவை மகளிர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பள்ளியை ஆய்வு செய்து, மாணவியர் மற்றும் பெற்றோரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை, அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணையை செப்., 4க்கு தள்ளி வைத்தது.