ADDED : ஏப் 20, 2024 01:54 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே பொட்டலுாரணி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மூன்று மீன் ஆலைகள் உள்ளன. மீன் கழிவிலிருந்து கோழி தீவனம் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர்.
அந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என கூறி கிராம மக்கள் ஆலைகளை அகற்ற கோரிக்கை வைத்தனர். மூன்று ஆண்டுகளாக இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர். 929 ஓட்டுகள் உள்ள ஊரில் மீன் ஆலைகளில் பணியாற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மட்டும் ஓட்டு பதிவு செய்தனர். தேர்தல் பணிக்கு வந்திருந்த போலீசார் உள்ளிட்டவர்களும் ஓட்டளித்துள்ளனர்.
ஓட்டு பதிவு நடந்ததாக காண்பிப்பதற்காக ஒரு ஸ்கார்பியோ காரில் கள்ள ஓட்டு போட சிலர் வந்தனர். அந்த வாகனத்தை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஓட்டு போட விடாமல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் தனியார் வாகனத்தில் அவர்களை அழைத்துச் சென்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வாகனத்தில் கண்ணாடி உடைந்தது.
அவர்களிடம் பேச்சு நடத்த வந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவர்கள் புறக்கணித்து, முற்றுகையிட்டு விரட்டியடித்தனர்.
ஊர் மக்கள் வீடுகளில் இருந்தால் ஓட்டு போட அதிகாரிகள் கட்டாயப்படுத்துவர் என்பதால் அங்கிருந்து வெளியேறி ஊர் கண்மாயில் ஒன்று கூடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்கினர்.
இதனால் கிராம மக்கள் முற்றிலுமாக ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்தனர்.

