ADDED : மார் 23, 2024 01:51 AM
கடையநல்லுார்:தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகேயுள்ள கடம்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மதன், 26, என்பவர், கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்டு சேர்ந்தமங்கலம் வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்திற்கான ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது.
அது தொடர்பாக வி.ஏ.ஓ.,விடம் கேட்ட போது, மீண்டும் விண்ணப்பித்து, ஆவணங்களை நேரில் எடுத்து வரும்படி கூறினார்.
ஆவணங்களுடன் மதன் நேரில் சென்று பார்த்தபோது, பட்டா மாறுதலுக்கு, 10,000 ரூபாய் லஞ்சமாக வழங்கும்படி வி.ஏ.ஓ., மாடசாமி கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மதன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர்களின் அறிவுரைப்படி, கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, வி.ஏ.ஓ., மாடசாமியிடம், ரசாயனம் தடவிய பணத்தை மதன் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையிலான போலீசார், மாடசாமியை கைது செய்தனர்.

