ADDED : மே 03, 2024 09:21 PM
சென்னை:வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்படி, ஏஜென்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள, திரு.வி.க., தொழிப்பேட்டையில், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழக இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களை அளித்து, வேலைவாய்ப்புகளுக்கு உதவுகிறது. தற்போது, ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால், அத்துறை சார்ந்த இளைஞர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகுகின்றனர். அதேபோல, தனியார் ஏஜென்சிகளையும் அணுகுகின்றனர்.
அவர்களுக்கு, அயல் மொழிகளை கற்பிக்கும் வகையில் பதிவு பெற்ற ஏஜென்சிகள் எங்களுடன் இணைந்து, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளை கற்பித்து, உரிய தகுதிகளுடன், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பலாம். இது, வேலை பெறுவோருக்கு அடிப்படை மற்றும் கூடுதல் தகுதியாக அமையும்.
இதில் விருப்பமுள்ள ஏஜென்சிகள், www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.