விக்கிரவாண்டியில் பிரசாரம் நிறைவு; வெளியேறிய தமிழக அமைச்சர்கள்
விக்கிரவாண்டியில் பிரசாரம் நிறைவு; வெளியேறிய தமிழக அமைச்சர்கள்
ADDED : ஜூலை 09, 2024 06:41 AM

விக்கிரவாண்டி : இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில், இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, ஏப்ரல் 6ல் உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தொகுதியில், 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும், தி.மு.க., - பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
தொகுதியில் உள்ள 2 லட்சத்து 34,178 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக, 276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 14ம் தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவுற்றது. தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து, மாலை 5:50 மணிக்கு விக்கிரவாண்டியில் நிறைவு செய்தார்.
பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி கெடாரில் பிரசாரம் செய்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரத்துாரில் தன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தொகுதியில், 25 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு பின் தொகுதியில் இருந்து வெளியேறினர்.

