39 என்பது 52 தொகுதியாகவும் மாறலாம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பேட்டி
39 என்பது 52 தொகுதியாகவும் மாறலாம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பேட்டி
ADDED : பிப் 26, 2025 07:19 AM

சென்னை: 'தமிழகத்திற்கான லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பது பொருத்தமற்றது' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி தெரிவித்தார்.
இது குறித்து, அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: கடைசியாக 2008ல் தொகுதி மறுவரையறை நடந்தது. முதலில் 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நடத்த திட்டமிடப்பட்டது. பிறகு அது சரியாக இருக்காது எனக் கூறி, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு, தங்களுக்கான லோக்சபா தொகுதிகள் குறைந்து விடும் எனக் கூறி, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால், உறுப்பினர் எண்ணிக்கை மாறாமல், தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது, 2026க்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மீண்டும் லோக்சபா, மாநில சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்ய தீர்மானிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை செய்ய வேண்டுமானால், அதற்கு முதலில் பார்லிமன்டில் சட்டம் கொண்டு வர வேண்டும்.
கடந்த 2008 போலவே, லோக்சபாவின் 543 தொகுதி எண்ணிக்கையை, அப்படியே வைத்துக் கொண்டு, அந்தந்த மாநிலங்களுக்குள், தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்கலாம். அல்லது 543 என்ற எண்ணிக்கையை இரு மடங்காகக் கூட ஆக்கலாம். அப்படி செய்தால், அதை ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி அதிகரிப்பது என்பதற்கு, விதிகள் வகுக்க வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் அதிகரிப்பதா அல்லது வேறு காரணிகள் அடிப்படையில் அதிகரிப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே, பார்லிமென்ட், மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, இப்போதிருக்கும் 543 தொகுதிகளோடு, கூடுதலாக 33 சதவீத தொகுதிகளை, அதாவது 179 தொகுதிகளை அதிகரிக்கலாம். அதன்படி பார்த்தால் தமிழகத்திற்கு 13 தொகுதிகள் அதிகரித்து, 52 தொகுதிகள் கிடைக்கும்; இதற்கும் வாய்ப்புள்ளது.
பார்லிமென்டில் சட்டம் கொண்டு வந்து, அதற்கென ஒரு கமிட்டி அமைத்து, அதன்பிறகு மறுவரையறை செய்ய வேண்டும். அதற்கான எந்தப் பணிகளும் நடக்காத நிலையில், தமிழகத்திற்கு இத்தனை தொகுதிகள் குறையும்; உ.பி., போன்ற மாநிலங்களுக்கு அதிகரிக்கும் எனக் கூறுவது பொருத்தமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.