எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் திறக்க கிடைக்குமா அனுமதி?
எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் திறக்க கிடைக்குமா அனுமதி?
ADDED : ஏப் 27, 2024 05:02 AM

சென்னை : லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 16 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
அன்றைய தினமே, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களும் பூட்டப்பட்டன. அரசு தரப்பில் ஆய்வுக் கூட்டம் நடத்த, புதிய திட்டங்களை துவக்க, புதிய அரசாணைகள் வெளியிட தடை உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை நாடு முழுதும், ஜூன் 4ல் நடக்க உள்ளதால், ஜூன் 6 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிந்து விட்டதால், மக்கள் பணி செய்வதற்கு வசதியாக, எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என, சென்னை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி, கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உட்பட பலர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, கடிதம் அனுப்பி உள்ளனர்.
பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை, எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் திறக்கப்படாது. இம்முறை எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்கள் அனுப்பிய கடிதம், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அலுவலகத்தை திறக்க அனுமதிப்பது குறித்து, தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

