சிறப்பு வகுப்பு நடத்தலாமா? மாறுபட்ட அறிவிப்பால் குழப்பம்
சிறப்பு வகுப்பு நடத்தலாமா? மாறுபட்ட அறிவிப்பால் குழப்பம்
ADDED : மே 11, 2024 08:07 PM
சென்னை:'கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, தலைமை செயலரும்; '10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வித்துறையும் அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நாட்களில், எந்த பயிற்சி வகுப்பும் நடத்த வேண்டாம் என, தமிழக அரசு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துஉள்ளார்.
தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவ நிலையும் உள்ளதால், கோடை விடுமுறை நாட்களில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனால், பள்ளிக்கல்வியின் ஒருங்கிணைந்த கல்வித்திட்ட இயக்குனரகம் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், '10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, நாளை, 13ம் தேதி முதல் துணைத் தேர்வு நடக்கும் நாள் வரை, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்' என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடை விடுமுறையில் எந்த வகுப்புகளும் நடத்த வேண்டாம் என, தலைமை செயலரும்; சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வித் துறையும் அறிவித்துள்ளதால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.