'மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் ஜாமின் ரத்து'
'மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் ஜாமின் ரத்து'
ADDED : மே 11, 2024 12:11 AM
சென்னை:ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள், மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்களின் ஜாமினை ரத்து செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என, தமிழக டி.ஜி.பி.,க்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் கடிதம் விபரம்:
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள், மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்களின் ஜாமினை ரத்து செய்ய, அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.
நீதிமன்றங்கள் ஜாமின் வழங்கும் போது, குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை மீறுவோரின் ஜாமினை ரத்து செய்யவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத்தை பாதிக்கும் கடும் குற்றங்களில், உரிய காலக்கெடுவுக்குள் புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில், குற்றவாளிகள் எளிதில் ஜாமின் பெற வழிவகை ஏற்படுகிறது.
இதுபோல கடுமையான குற்ற வழக்குகளில் தனி கவனம் செலுத்தி, புலன் விசாரணை செய்து, உரிய காலத்துக்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன், வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும்பட்சத்தில், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து போலீசார் உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால், குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.