திருச்சி தொகுதி செலவு கணக்கில் முரண்பாடு வேட்பாளர்கள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தல்
திருச்சி தொகுதி செலவு கணக்கில் முரண்பாடு வேட்பாளர்கள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 27, 2024 02:28 AM
திருச்சி:திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவுக்கணக்கில் முரண்பாடு உள்ளது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
திருச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என, 35 பேர் போட்டியிட்டனர்.
மார்ச், 25ல் துவங்கி, ஏப்.,17ம் தேதி வரை செய்த, தேர்தல் பிரசார செலவுக்கணக்குகளை, மேற்கண்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் பலரும், மூன்று கட்டங்களாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையா, 12.15 லட்சம் செலவு செய்ததாக கூறியுள்ளார். ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, 38.70 லட்சம் ரூபாயும், அ.ம.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன், 21.27 லட்சம் ரூபாய் செலவிட்டதாகவும், நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ், 5.66 லட்சம் செலவிட்டதாகவும், தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழுக்கள் கண்காணிப்பின் படி தயாரிக்கப்பட்ட நிழல் அறிக்கையில், அ.தி.மு.க., வேட்பாளர் தாக்கல் செய்ததை விட கூடுதலாக, 41.49 லட்சம் ரூபாயும், ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ, 17.54 லட்சம் ரூபாயும், அ.ம.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன், 19 ஆயிரம் ரூபாய் கூடுதலாகவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ், 23 ஆயிரம் ரூபாய் கூடுதலாகவும் செலவழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேர்தல் பிரசார செலவுத்தொகையில் மேற்கண்ட முரண்பாடுகளுக்கு வேட்பாளர்கள் சரியான ஆவணங்களுடன், கணக்குகளை தாக்கல் செய்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் சார்பில், வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவுக்கணக்கிலும் வேறுபாடுகள் உள்ளதை விளக்கவும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

