ஜெ.,வை எதிர்த்து போட்டியிட்டவருக்கு வாய்ப்பு தொண்டர்கள் கடும் அதிருப்தி
ஜெ.,வை எதிர்த்து போட்டியிட்டவருக்கு வாய்ப்பு தொண்டர்கள் கடும் அதிருப்தி
ADDED : மார் 22, 2024 01:14 AM
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கும், வசதி படைத்தவர்களுக்கும் மட்டும், லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு இருப்பது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியதும், அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என, அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார். அதை நம்பி லோக்சபா தேர்தலில் போட்டியிட, கட்சியினர் அதிக ஆர்வம் காட்டினர்.
அமையவில்லை
ஆனால், பழனிசாமி எதிர்பார்த்தபடி கூட்டணி அமையவில்லை. பா.ம.க., உடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இறுதியாக தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் மட்டும், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தன.
கூட்டணி பலமாக இல்லாததால், வசதி படைத்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள், போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.
அதைத்தொடர்ந்து, தேர்தலில் தாராளமாக செலவு செய்யக்கூடிய வகையில், வசதியுடன் உள்ளவர்கள் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், கட்சி சாராதவராக இருந்தாலும், வாய்ப்பு வழங்கப்படும் என, கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதனால், போட்டியிட ஆர்வம் இருந்தும், பணம் இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
நேற்றுமுன்தினம் 16 வேட்பாளர்கள், நேற்று 17 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிட அனைத்து தகுதி இருந்தும், பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, மூத்த நிர்வாகிகள் பலர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளதாக பொதுச் செயலர் கூறுகிறார். ஆனால், அனைவரும் வசதி படைத்தவர்கள். வசதி இல்லாத புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
திருநெல்வேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிம்லா முத்துச்சோழன், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர். சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு உடனடியாக, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது. அப்போது ஜானகி அணி வேட்பாளருக்கு முகவராக இருந்ததாக, பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சிக்கும் பழனிசாமி, ஜெயலலிதாவை எதிர்த்தவருக்கு வாய்ப்பு கொடுத்தது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
குரல் எழுப்பும்
அதேபோல, கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத டாக்டர், ஒப்பந்ததாரர்கள் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள தொகுதி வேட்பாளர் ஒருவருக்கு வேஷ்டி கட்டவே தெரியவில்லை.
ஏனெனில், இதுவரை அவர் வேஷ்டி கட்டியதில்லை. நேற்றுதான் கட்சி அலுவலகமே வந்துள்ளார். ஜெயலலிதா இருந்த போது, கட்சிக்கு விசுவாசமானவரா என்று மட்டுமே பார்க்கப்படும். பணம் இல்லாத பலருக்கு வாய்ப்பு வழங்கினார்.
அதேபோல, ஜெயலலிதா இருந்த போது யாரை வேட்பாளராக அறிவித்தாலும், மற்றொரு கோஷ்டி, அறிவித்த வேட்பாளருக்கு எதிராக குரல் எழுப்பும். கட்சி அலுவலகம், ஜெயலலிதா வீடு முன் போராட்டத்தில் ஈடுபடுவர்.
ஏனெனில் வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை. இம்முறை கட்சியினர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை. யாரோ நிற்கட்டும் என்ற மன நிலையில் உள்ளனர். இது கட்சிக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

