ADDED : ஏப் 16, 2024 04:55 AM

கோவை : தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை மீது, இரு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில், மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஒண்டிபுதுார் கதிர்மில்ஸ் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது, ஒலிபெருக்கிகளை 'ஆப்' செய்து விட்டு, வாக்காளர்களை பார்த்து கைகளை அசைத்தபடியும், வணங்கியபடியும் சென்றார்.
இதை பார்த்த போலீசார், தேர்தல் விதிமுறை மீறல் எனக்கூறி, வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலை, சாலை மறியலில் ஈடுபட்டார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், உதவி கமிஷனர் பார்த்தீபன் ஆகியோர், சமரசம் செய்ததை தொடர்ந்து, மறியலை அவர் கைவிட்டார்.
இச்சம்பவம் குறித்து, பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சூலுார் போலீசார் அண்ணாமலை, சேலஞ்சர் துரை, உட்பட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்தனர்.
இதே போல, காமாட்சிபுரம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பா.ஜ.,வினர் பிரசாரம் மேற்கொண்டதாக, சிங்காநல்லுார் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.,வினர் மீது, அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே, கடந்த வாரம் பீளமேடு போலீசாரும் அண்ணாமலை மீது, தேர்தல் விதிமீறல் குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். போலீசார் தொடர்ந்து, ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக, பா.ஜ.,வினர் புகார் தெரிவிக்கின்றனர்.

