ADDED : ஏப் 17, 2024 11:54 PM
சென்னை:அண்ணா பல்கலை பதிவாளர் நியமனத்தை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில், உயர்கல்வித் துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, எழும்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினருமான பரந்தாமன் தாக்கல் செய்த மனு:
சிண்டிகேட் கூட்டத்தில், அண்ணா பல்கலை பதிவாளராக டாக்டர் பிரகாஷ் என்பவரை நியமிக்க, துணைவேந்தர் கருத்துருவை தாக்கல் செய்தார். இதற்கு, சிண்டிகேட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விளம்பரம் கொடுத்து, பின் பதவியை நிரப்பும்படி அறிவுறுத்தப்பட்டது.
அடுத்தக் கூட்டத்தில் மீண்டும் கருத்துருவை தாக்கல் செய்து, பதிவாளராக பிரகாஷை நியமித்து உத்தரவிடப்பட்டது. சிண்டிகேட்டில் உள்ள 13 உறுப்பினர்களில், 9 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருத்தம் மேற்கொண்டு, ஆறு பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறி, பதிவாளரை நியமித்தது, விதிகளுக்கு முரணானது. அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி பரதசக்ரவர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அண்ணா பல்கலை மற்றும் உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7க்கு, நீதிபதி தள்ளி வைத்தார். சிண்டிகேட் கூட்டத்தின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தி வைக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

