முன்னாள் டி.ஜி.பி., நடராஜ் மீதான வழக்கு முடித்து வைப்பு
முன்னாள் டி.ஜி.பி., நடராஜ் மீதான வழக்கு முடித்து வைப்பு
ADDED : ஜூலை 31, 2024 12:49 AM
சென்னை:'முதல்வருக்கு எதிராக தான் கருத்து கூறியதாக, சமூக வலைதளத்தில் வந்த தகவலுக்கும், தனக்கும் தொடர்பில்லை' என, முன்னாள் டி.ஜி.பி., நடராஜ் தெரிவித்ததை அடுத்து, வழக்கை முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷீலா, 'முன்னாள் டி.ஜி.பி.,யும், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நடராஜ், சமூக வலைதளத்தில், தமிழக அரசு குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும், எதிரான கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திருச்சி மாவட்ட 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ், நடராஜ் மீது வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடராஜ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் டி.ஜி.பி., நடராஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 'முதல்வர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டுள்ளேன். தன் மீதான வழக்கு எதிர்பாராதது. வாட்ஸாப் தகவலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை தான் அங்கீகரிக்கவும் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, 'வாட்ஸாப்' குழுவில் பதிவிட்டு, அதன் நகலை காவல்துறைக்கு வழங்கும்படி கோரினர். அப்போது, அவற்றை செய்யத் தயாராக இருப்பதாக, நடராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, மனுதாரர் தரப்பில் வருத்தம் தெரிவித்துள்ளதால், 24 மணி நேரத்துக்குள் பிரமாண பத்திரத்தை பதிவிட்டு, உடனே காவல் துறைக்கும் தெரியப்படுத்த உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

