கட்டடமே கட்டாமல் ரூ.36 லட்சம் 'ஸ்வாகா'; முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு
கட்டடமே கட்டாமல் ரூ.36 லட்சம் 'ஸ்வாகா'; முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : மே 27, 2024 05:01 AM

சென்னை : தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடமே கட்டாமலும், தரமற்ற கட்டடம் கட்டியும், 36 லட்சம் ரூபாய் சுருட்டியதாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் சத்யா மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் சத்தியநாராயணன். சென்னை தி.நகரில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவருக்கு, 1991 - 96ல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் கிடைத்தது.
முக்கிய நபரானார்
தி.நகர் சத்யா என அழைக்கப்படும் இவர், 2011 - 16ல் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக செயல்பட்டார். அதன்பின், கட்சியில் மிக முக்கிய நபராக மாறினார்.
கடந்த 2016 - 2021ல் தி.நகர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அதன்பின், 2021ல், அதே தொகுதியில் போட்டியிட்டு, 137 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான நபராக மாறி, கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக, 2.64 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்தாண்டு செப்டம்பரில் வழக்கு பதிவு செய்து, 18 இடங்களில் சோதனை நடத்தினர். தற்போது, அவர் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சத்யா, எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, 2018 - 2019ம் ஆண்டுக்கான தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மேற்கு மாம்பலம் காசிகுளம் என்ற இடத்தில், 'மல்டிபர்பஸ் பில்டிங்' எனப்படும், பல் நோக்கு கட்டடம் கட்டியதாக, 13 லட்சம் ரூபாய் சுருட்டி உள்ளார் என்ற, குற்றச்சாட்டு எழுந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், அந்த இடத்தில் ஏற்கனவே மாநகராட்சி கட்டிய கட்டடத்தை கணக்கு காட்டி, டெண்டர் மற்றும் திட்ட மதிப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து, பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கையாடல்
அதேபோல, சென்னை கோடம்பாக்கம் பிருந்தாவன் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு உள்ளிட்ட மூன்று இடங்களில், தரமற்ற வகையில், 'மல்டிபர்பஸ் பில்டிங்' கட்டி, பணம் கையாடல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, சத்யா, சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல உதவி பொறியாளர்களாக இருந்த இளங்கோவன், மணிராஜா, ராதாகிருஷ்ணன்.
செயற்பொறியாளர் பெரியசாமி, அந்த மண்டலத்தின் முன்னாள் அதிகாரி நடராஜன் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் கூட்டு சதி செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து, 36 லட்சம் ரூபாய் சுருட்டி உள்ளாக வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கிஉள்ளனர்.

