தேர்தல் நடத்தை விதிமீறல்: பன்னீர்செல்வம் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிமீறல்: பன்னீர்செல்வம் மீது வழக்கு
ADDED : மார் 29, 2024 01:26 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ., கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி, அ.தி.மு.க.,வில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் கடந்த 25ம் தேதி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை நிரூபிக்க, ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தினர். இதனால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
இது சம்பந்தமான தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆதீஸ்வரன், கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பன்னீர்செல்வம், பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல, தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க., வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

