ADDED : ஆக 17, 2024 07:35 PM
சென்னை:முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம், ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு, கோவை மாவட்ட தி.மு.க., பிரமுகர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை மாவட்டம், சூலுார் ஒன்றியக்குழு பொறுப்புச் செயலராக, ஒன்றிய கவுன்சிலராக, ஒன்றிய தலைவராக பதவி வகித்தவர் ராஜேந்திரன்; தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவர், அ.தி.மு.க., அமைச்சரவையில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த, எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக, 2021ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2021 ஜனவரியில், பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ரயிலில் பாலியல் தொல்லை செய்ததாக, எனக்கு எதிராக அமைச்சர் வேலுமணி அவதுாறாக பேசியுள்ளார். என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியுள்ளார்.
எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. ரயிலில் பயணம் செய்தபோது, மேல் படுக்கைக்கு செல்ல ஏற முயன்றபோது, தவறி கீழ் படுக்கையில் இருந்த பெண் பயணி மீது விழுந்து விட்டேன்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, 15 நாட்களுக்குப் பின், அந்தப் பெண் பயணியின் கணவரிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். பின், அந்த பயணியே, சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, வேண்டுமென்றே இது நடக்கவில்லை என வாக்குமூலம் அளித்தார். எனக்கு எதிரான வழக்கை, 2019ல் உயர் நீதிமன்றமும் ரத்து செய்தது. இந்த விபரம் அமைச்சர் வேலுமணிக்கு தெரிந்திருக்க வேண்டும். இருந்தும், தொடர்ந்து அவதுாறு செய்கிறார்.
எனவே, மானநஷ்டஈடாக 1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க, அமைச்சர் வேலுமணிக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு எதிராக அவதுாறாக பேச, நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றாத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் ராஜேந்திரன்.
வேலுமணி சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகி, ''துன்புறுத்தும் நோக்கில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், வேலுமணி பேசினார். எதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதை மக்களுக்கு சொல்வதில் தவறு இல்லை,'' என்றனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு:
பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு மனுதாரர் போகவில்லை; வேலுமணியின் பேச்சையும் அவர் கேட்கவில்லை. உறவினர், நண்பர்கள், தி.மு.க., மாவட்டச்செயலர் ஆகியோர், தன்னை போனில் தொடர்பு கொண்டு கூட்டத்தில் பேசப்பட்டதை கூறியதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே, மனுதாரருக்கு நேரடியாக தெரியவில்லை. உறவினர், நண்பர்கள், தி.மு.க., மாவட்டச்செயலர் பெயர்களையும், மனுவில் தெரிவிக்கவில்லை. முக்கிய சாட்சிகளான இவர்களின் பெயர்களை, தெரிவித்திருக்க வேண்டும்; அவர்களை விசாரித்திருக்க வேண்டும். அதை மேற்கோள்ள தவறிவிட்டு, மனுதாரர் நிவாரணம் கோர முடியாது.
வழக்குப்பதிவு செய்ததை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக, மனுதாரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நஷ்டஈடு கோர மனுதாரருக்கு உரிமை இல்லை. அதேநேரத்தில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பேச, வேலுமணிக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. மற்றப் பிரச்னைகள் குறித்து பேச, அவருக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

