ADDED : ஜூலை 25, 2024 12:35 AM
சென்னை:சட்ட விரோத பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக, ஜாபர் சாதிக் மனைவி, அவரது சகோதரர் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35. வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய் சம்பாதித்த வழக்கில், மார்ச் மாதம் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு, டில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே, ஜாபர் சாதிக் மீது, சென்னையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்து, வாக்குமூலமும் பெற்று உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆவடி, திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப், அவரது மனைவி ஆயிஷா வீடுகளிலும் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
மேலும், ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு, 32; சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 34, என்பவரிடமும் விசாரித்துள்ளனர். தொடர் விசாரணையில், இருவரும் சட்ட விரோத பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், முன்ஜாமின் கோரி அமீனா பானு, முகமது சலீம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணை வரும், 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.