கலைமகள் சபா நிலத்தை பகிர்ந்தளிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வழக்கு
கலைமகள் சபா நிலத்தை பகிர்ந்தளிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வழக்கு
ADDED : செப் 12, 2024 01:13 AM
சென்னை:மோசடி புகாரில் சிக்கிய, 'கலைமகள் சபா' நிறுவனத்தின் பெயரில் உள்ள நிலங்களை, உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலைமகள் சபா நிறுவனம், 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் டிபாசிட் பெற்று, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டில்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் அசையா சொத்துக்களை வாங்கி, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இறங்கியது.
தொடர் முறைகேடு, தவறான நிதி நிர்வாகத்தால், கலைமகள் சபா நிறுவனம் பிரச்னையில் சிக்கியது.
சொத்துக்களை பொறுப்பில் எடுத்து, அவற்றை விற்று வரும் தொகையை உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்க நியமிக்கப்பட்டிருந்த ரிசீவர்களை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், குமரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
குமரேசனின் விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் பரிசீலிக்கும்படி, 2007ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கோவை சக்தி தாக்கல் செய்த மனுவில், உறுப்பினர்களின் முதலீடு அடிப்படையில், கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை ஒதுக்கும்படி கோரியிருந்தார்.
மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கலைமகள் சபா நிர்வாகத்தை, சட்டப்படியான அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
பதிவுத் துறை உதவி ஐ.ஜி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை, சிறப்பு அதிகாரியாக, வணிக வரித் துறை செயலர் நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. கடந்த 2021 நவம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, கோவை பீளமேட்டைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கலைமகள் சபா, 13,500 ஏக்கர் நிலங்களை வாங்கியது. இதன் சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய். உறுப்பினர்களின் பங்காக, 150 கோடி ரூபாய் தான் பெற்றது. அதில், 50 முதல் 75 கோடி ரூபாய் வரை, பல உறுப்பினர்களுக்கு வழங்கியது.
மீதித்தொகை 100 கோடி ரூபாய் வரை தான் கொடுக்க வேண்டியதிருக்கும். 2021ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விரும்பத்தகுந்த முடிவுகள் வரவில்லை. உறுப்பினர்கள் பலருக்கு, ஏற்கனவே வயதாகி விட்டது.
எனவே, உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை பகிர்ந்து அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கமலநாதன், உறுப்பினர்கள் சிலர் சார்பில், வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன் ஆஜராகி, 'தமிழகத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள மாநிலங்களிலும் சொத்துக்கள் இருப்பதால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும்' என்றனர்.
இதையடுத்து, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.

