ADDED : ஜூலை 02, 2024 12:39 AM
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம் என்ற பெயர்களில், மூன்று குற்றவியல் சட்டங்களை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, இவை அமலாகி உள்ளன.
புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்துாரை சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:
மூன்று புதிய சட்டங்களின் பெயர்கள், ஹிந்தி மொழியில் உள்ளன. இது, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்டத்துறை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என, அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய சட்டங்களுக்கு, ஹிந்தியில் தலைப்பு வழங்க அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளில் சட்டங்களுக்கு பெயர் வழங்க, பார்லிமென்டுக்கு அதிகாரம் இல்லை. இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், பார்லிமென்டும், சட்டசபையும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். அப்போது, அந்தந்த மாநிலங்கள், தங்கள் மொழிகளில் பெயர் வைத்தால், குழப்பங்கள் ஏற்படும்.
இந்தியாவில், 56.37 சதவீதம் பேருக்கு, ஹிந்தி தெரியாது. ஹிந்தி மொழியில் புதிய சட்டங்களுக்கு பெயர் வைத்திருப்பது, அந்த மொழி தெரியாத மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. தமிழகத்திலும் நடைமுறை பிரச்னைகள் உள்ளன. பெரும்பாலான நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு, ஹிந்தி மொழி பரிச்சயம் கிடையாது.
எனவே, மூன்று புதிய சட்டங்களையும் அமல்படுத்த, தடை விதிக்க வேண்டும். புதிய சட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைக்க, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.