மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கோரி வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கோரி வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஆக 17, 2024 02:10 AM

மதுரை: துாய்மைப் பணியாளர்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் சகாய பிலோமின்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: கையால் மலம் அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அத்தொழிலாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் சட்டம் 2013ல் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் குறித்து மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் துாய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
இரு மாவட்டங்களிலும் மலம் அள்ளும் தொழிலாளர்களை அடையாளம் காண அரசு தரப்பில் கணக்கெடுப்பு நடத்தவில்லை. அவர்களை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு மூலம் அடையாளம் கண்டுள்ளோம்.
அவர்களின் போட்டோ, குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் படிவங்களை மாவட்ட நிர்வாகங்கள், மதுரை மாநகராட்சி கமிஷனரிடம் சமர்ப்பித்தோம். சட்டபடி மறுவாழ்வு அளிக்க கோரினோம். நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு அடையாள அட்டை வேண்டும். மறுவாழ்வு அளிப்பதை உறுதி செய்ய, கணக்கெடுப்பதற்கான குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மதுரை மாநகராட்சி கமிஷனர், விருதுநகர் கலெக்டர் தற்போதைய நிலை குறித்து செப்.,13 ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

