ADDED : ஏப் 07, 2024 02:07 AM
சென்னை:ராமநவமியை முன்னிட்டு, கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை, யாத்திரை செல்ல அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திலீப் நம்பியார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ராமநவமியை முன்னிட்டு, ஏப். 12 முதல் 17 வரை, கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை வழியாக, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை, யாத்திரை செல்ல அனுமதி கோரினோம். சட்ட ஒழுங்கை காரணம் காட்டி, அனுமதி மறுத்தனர்.
இதை, ரத்து செய்து, யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஏப். 8ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

