குற்றாலத்தில் குளிக்க நேர கட்டுப்பாட்டை தளர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்றாலத்தில் குளிக்க நேர கட்டுப்பாட்டை தளர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 06, 2025 03:21 AM
மதுரை: அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ.,சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் இரவில் குளிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளுக்கு வருமானம் குறையும். பலர் கடைகளை ஏலத்தில் நடத்த முன்வரவில்லை. அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது.
பிரதான அருவி, ஐந்தருவிகளைப் போல 24 மணி நேரமும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தமிழக வனத்துறை செயலர், தென்காசி வனப்பாதுகாவலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுதாரரின் மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.