ADDED : ஜூலை 17, 2024 07:39 PM
சென்னை:ஹிந்து மதத்தை அவதுாறாக விமர்சித்ததாக, தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது பதிவான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து முன்னணி பிரமுகர்கள் ஆனந்தராஜ், வெங்கடேசன், ரஞ்சித்குமார் ஆகியோர் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து, பொது இடத்தை அசிங்கப்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக வி.காளத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மூவரும் மனுத் தாக்கல் செய்தனர். மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'இந்த வழக்கில், 2022 டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறைபாடுகள் உள்ளதாக, திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதன்பின், தாக்கல் செய்யப்படவில்லை' என்றார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர்களுக்கு எதிரான வழக்கில், அதிகபட்சம் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும். ஓராண்டுக்குள், வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்; இதுவரை எடுக்கவில்லை. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, கூறியுள்ளார். ஆனந்தராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான, இதேபோன்ற மற்றொரு வழக்கையும், நீதிபதி ரத்து செய்தார்.

