ADDED : ஏப் 07, 2024 12:57 AM
சென்னை:வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, மாநிலம் முழுதும் இரண்டாவது நாளாக 40 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், ஒப்பந்தாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பணம் உட்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், 40 இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சென்னையில் இரண்டாவது நாளாக நேற்று, விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவின் நண்பர் என கூறப்படும் தங்கவேலு, திருவான்மியூர் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீடு, அபிராமபுரம் ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.முருகன் வீடு மற்றும் அலுவலகத்திலும், இரண்டாவது நாளாக சோதனை நீடித்தது. அப்போது, பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லுாரி அருகே உள்ள அலுவலகத்தின் இரண்டு அறைகளை பூட்டி, வருமான வரித்துறையினர், 'சீல்' வைத்தனர்.
ஈரோடு பழையபாளைத்தில் சக்தி மஹாலில், ஆர்.ஆர்.துளசி கன்ஸ்டரக் ஷன்ஸ் அலுவலகம் செயல்படுகிறது. அதன் உரிமையாளர் சத்தியமூர்த்தியின் அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், அவரது தாய் வசிக்கும், பவர் ஹவுஸ் சாலையில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடையை சேர்ந்த தொழிலதிபர் தனசேகரனின் வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இதேபோல், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் வருமான வரி அதிகாரிகள், இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.

